ஆத்தி| மந்தாரை



மூலிகையின் பெயர் – ஆத்தி
தாவரப்பெயர் – Bauhinia racemosa
தாவரக்குடும்பம் – Caesalpiniaceae
வேறு பெயர்கள் – ஆர்,Bidi Leaf Tree
பயன்தரும் பாகங்கள் – இலை, பூ, கனி, பட்டை,வேர், மரம்.

     வளரியல்பு – ஆத்தி என்பது ஒரு சிறிய, அடர்த்தியான மரமாகும். சற்று கோணல் மாணலாக வளரும். இதன் கிளைகள் தொங்கும் அமைப்பில் இருக்கும். இது கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் வரை உயரமான இடங்களில் இந்தியா எங்கும் காணப்படுவதுடன், இலங்கை, சீனா, திமோர் ஆகிய நாடுகளிலும் இது பரவலாக உள்ளது. இது ஒரு வித மந்தாரையாகும்.


     இலைகள் இரண்டு சிற்றிலைகள் சேர்ந்த கூட்டிலைகள். 1-2 அங்குல நீளமிருக்கும். இச்சிற்றிலைகள் நீளத்தில் பாதிக்குமேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும். நரம்புகள் கைவடிவமாக ஓடும்.

     பூ சற்று ஒரு தளச்சமமானது. புறவிதழ்கள் 5 ஒன்றாகக்கூடி மடல் போல இருக்கும். நுனியில் 5 பற்கள் இருக்கும். அகவிதழ்கள் 5 சற்றுச் சமமின்றியிருக்கும். வெளுப்பான மஞ்சள் நிறமுள்ளவை, தழுவு அடுக்குள்ளவை. விரைவில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. மேற்பக்கத்து இதழ் எல்லவற்றிற்கும் உள்ளே அமைந்திருக்கும் கேசரங்கள் 10. சூலகத்திற்குச் சிறுகாம்பு உண்டு, பல சூல்கள் இருக்கும்.

     கனி ஒரு சிம்பு. 6 – 12 அங்குல நீளமும் 3/4 – 1 அங்குல அகலமும் இருக்கும்.

இலக்கியங்களில் பாடப்பெற்ற மரங்களில் ஆத்தி மரத்துக்கும் தனி இடம் உண்டு. இந்த மரம் இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக காணப்படுகிறது. இது ஒரு பசுமையான மரம். சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடியது. இலைகள் அரை வட்ட வடிவத்துடன் ஒன்றை ஒன்று இணைத்தது போன்று காணப்படும். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை பூக்கும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். காய்கள் இளம் பச்சை நிறம் கொண்டு கனியாகும்போது பழுப்பு நிறமாகிவிடும்.

     இன்றைக்கும் தமிழ் நாட்டில் ஆர்க்காடு, ஆலங்காடு, வேற்காடு, களக்காடு என காடுகள் பெயரில் ஊர்கள் உள்ளன. இவற்றில் ஆர் என்பது ஆத்தியை குறிக்கும் சொல்லாகும். ஆத்தி மலர் மாலையை அணிந்த சோழ மன்னனை ஆரங்கண்ணி சோழன் என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த காலத்தில் ஆத்தி மரம் நிறைந்த பகுதிதான் இன்றைக்கு ஆர்க்காடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
     ஆர்ப்பாக்கம் என்ற பெயரில் ஒரு ஊரும்உள்ளது. பழமை வாய்ந்த சோழர்களின் தலைநகராகவும், பாடல் பெற்ற திருத்தலமாகவும் விளங்கும் திருவாரூர் ஆதி காலத்தில் ஆத்தி மரங்கள் அதிகம் இருந்தமையால்தான் ஆரூர் எனப்பட்டது.

     காட்டு அத்தி என்று அழைக்கப்படும் ஆத்தி மரத்துக்கும் மருத்துவத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கல்லீரல் வீக்கம் நோயை நம்மால் உடனடியாக உணரமுடியாது. இதுபோன்ற நோய்களில் இருந்தும், தகாத உடலுறவால் ஏற்படும் நோய், வெட்டை நோய், பித்தம், வாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் மூலிகை மரமாக விளங்குவது ஆத்தி மரம்.

     தமிழகத்தில் ஆத்தி மரம் மலை அத்தி, அரசமந்தம், பேயத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் இலை, காய், கனி, பட்டை, வேர் என அனைத்து பாகமும் மருத்துவ குணம் வாய்ந்தது. மரத்தின் பட்டையில் இருந்து நார் எடுக்கலாம். வீடுகளில் அலங்கார மரமாகவும் வளர்க்கிறார்கள். ஆத்தி மரத்தின் வேர், பட்டையை இடித்து தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் 

     கல்லீரலில் ஏற்பட்டு இருக்கும் வீக்கம் வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். நல்ல பசியை உண்டாக்கும். குடற்புழு மடிந்து போகும். ஆத்திக் கனியை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்துவிட்டு பிறகு அந்த தண்ணீரால் வாய்க்கொப்பளித்தால் நாக்கில் ஏற்படும் புண், தொண்டை நோய் குணமாகும். பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகிவிடும். சிறுநீரக நோய்களுக்கும், புற்று நோய்களுக்கும் ஆத்தி மரம் மருந்தாகப் பயன்படுகிறது. 

     இம்மரத்தின் பட்டையை சீதபேதி, காய்ச்சல், தோல் நோய்களுக்கும், உடல் வீக்கத்துக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும், பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்தவும், இந்திரிய கோளாறுகளுக்கும், தகாத உடலுறவால் ஏற்படும் வெட்டை நோய்களுக்கும், குஷ்ட ரோக தடிப்புகளுக்கும் மருந்தாகக் கொடுக்கிறார்கள். பேதி, மாந்தம், இருமலுக்கு நல்ல மருந்து. நச்சை நீக்குகிறது. 

     காய் சிறுநீர் பெருக்கியாக நோயாளிகளுக்கு பயன்படுகிறது. மலர் சீதபேதியை கட்டுப்படுத்தி குடற் புழுக்களை கொல்கிறது. விதை விஷக்கடிக்கும், புண்களுக்கும் மருந்தாகிறது. பட்டையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்நீரால் குளித்து வந்தால் உடலில் உள்ள படை நீங்கிவிடும். 

     இப்படி பல்வேறு மருத்துவ குணத்துடன் மூலிகை மரமாக இருக்கும் ஆத்தி மரம் நம் தமிழகத்தில் சில சிவன் கோயில்களில் தலவிருட்சமாக இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது. இந்த மரத்துக்கும் தாழம்பூவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். 

     இறைவனின் முடியை படைப்புக் கடவுளான பிரம்மன் பார்த்ததாக பொய்ச்சாட்சியம் அளித்த தாழம்பூவை ‘எந்த ஒரு கோயிலிலும் தனக்கு நடைபெறும் பூஜையில் பயன்படுத்த மாட்டார்கள் என்று இறைவன் சபித்துவிட்டார். பிரம்மாவுக்காக பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவத்தைப்போக்க, தாழம்பூ திருச்செங்காட்டங் குடியில் ஆத்தி மரமாக முளைத்து இறைவனுக்கும், பக்தர்களுக்கும் நிழல் தந்து தன் பாவத்தை போக்கிக்கொள்வதாக கூறப்படுகிறது. 

     அதேபோல் அவ்வையார், ஆத்தி சூடி அமர்ந்த தேவனே என்று பாடி சிவபெருமானை வணங்கியிருக்கிறார். சிவபெருமானைப்பற்றி ஆர்புனை சடையோன் என்று புட்ப விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆர் என்பது ஆத்தியாகும். எனவே ஆத்தி மரத்துக்கும்

#pookal_kangayam

கருத்துகள்