அலையாத்தி காடுகள்


     சுமார் 1 கோடியே 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்திய கடற்கரைகளில் அலையாத்தி காடுகள் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. கடல் அலைகளால் நிலம் அரிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்காற்றுகின்றன.
     இது கடற்கரையில், ஆறுகளின் முகத்துவாரத்தில் இருக்கும். இதில் வளரும் தாவரங்களுக்கு கடும் உவர்ப்புள்ள கடல் நீர் ஆகாது. கொஞ்சம் நன்னீரும், கொஞ்சம் கடல் நீரும் கலந்த கலவையையே இவை விரும்பும். இதனையே வாழ்வாதாரமாக கொண்ட நன்னீர் மீன்கள், இறால்கள், நண்டுகள், புலி, நரி, முதலை, பாம்பு, ஆமை மற்றும் ஏராளமான பூச்சியினங்கள் உண்டு. அலையாத்தி காடுகளில் மட்டுமே வாழக்கூடிய 70 வகை தாவரங்கள் உண்டு. அவை நிலத்தின் வேறெந்த பகுதிகளிலும் வாழாது. மேலும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஏற்ற பாதுகாப்பான இடமாகவும் இது திகழ்கிறது.பல கடல்வாழ் நுண்ணுயிரிகள் தோன்றும் இடமும் இதுதான்.
     மேலும் இவை அதிக அளவில் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்ச வல்லது. ஒரு ஹெக்டர் பரப்புள்ள அலையாத்தி காடு ஒரு நாளில் நூறு கிலோ அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுமாம். மேலும் நிலப்பரப்பிலிருந்து வெள்ளத்தில் கரைத்து எடுத்துவரப்படும் கழிவுகளில் உள்ள கடுமையான உலோகங்களை அலையாத்தி காடுகளில் உள்ள தாவரங்கள் உறிஞ்சி நீரை தூய்மையாக்குகின்றன. மேலும் கடல் சீற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தும் திறனும் உண்டு. இது இருக்கும் இடத்தில் சுனாமி தாக்கும் என்கிற அச்சமே தேவையில்லை.
     அலையாத்தி காடுகள் முழுவதுமே சகதி நிறைந்த சதுப்பு நிலமாகும். இது மனிதர்களுக்கும், மற்ற பல்லுயிர்களுக்கும் நன்மைகளை மட்டுமே தருகிறது. இந்தியாவில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளது.
     மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் ஐரோலி, விக்ரோலி ஆகிய இரண்டு இடங்களில் அலையாத்தி காடுகள் உள்ளன. விக்ரோலியில்தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய அலையாத்தி காடு உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 2000 ஹெக்டர் ஆகும். இதில் 16 வகையான சதுப்பு நில தாவரங்கள், 82 வண்ணத்து பூச்சி இனங்கள், 208 பறவை இனங்கள், 20 மீன் இனங்கள், 13 நண்டு இனங்கள், 7 இறால் இனங்கள், காட்டுப்பன்றி, குள்ளநரி, தேவாங்கு, நீர்நாய், சிறுத்தை ஆகியன வாழ்ந்து வருகின்றன.
     விக்ரோலியில் உள்ள இந்த அலையாத்தி காட்டை கோத்ரெஜ் நிறுவனம் பாதுகாத்து வருகிறது. சதுப்பு நிலத்திலிருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் எந்த கட்டுமானமோ, விரிவாக்க பணியோ செய்யக்கூடாதென மும்பை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் கோத்ரெஜ் நிறுவனம் சதுப்பு நிலங்களின் ஓரமாக பல அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதை நகர்புறமாக மாற்றிவருகிறது. 50 மீட்டர் தள்ளிதான். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு சிறிய வீட்டின் குறைந்தபட்ச விலை 2.8 கோடி.

கருத்துகள்