கருவேல மரம்


   
     கருவை மரம், நாட்டு கருவேல மரம் எனப் பல்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களுள் இதுவும் ஒன்று. கருவேல மரத்தின் தாவரவியல் பெயர், ‘அக்கேசியா நிலோடிக்கா’. கருவேல மரங்கள் ‘அக்கேசியா’ இனத்தைச் சேர்ந்தவை. அக்கேசியா என்றால் முள் நிறைந்தவை என்று பொருள். பெரும்பாலான தாவரங்கள், மனித முயற்சி இல்லாமலேயே வளர்ந்து பலனளிக்கின்றன. அப்படித் தானாக முளைத்துப் பலன்தரும் மரங்களில் முக்கியமானவை கருவேலம்.

     கரிசல் மண்ணுக்கும் கண்மாய்களுக்கும் பிரத்யேகமாக இயற்கை படைத்திருக்கும் கொடைதான் கருவேல மரம். கருவேல விதையின் தோல் கடினமாக இருப்பதால், விதைகளை நேரடியாக விதைக்கும்போது, முளைக்கக் காலதாமதமாகும்.

     இதன் நெற்றுகளை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்து, அவற்றின் கழிவுகளிலிருக்கும் விதைகளைச் சேகரித்து விதைக்கும்போது சீக்கிரம் வளரும். நேரடியாக விதைக்க வேண்டுமென்றால், சாணத்தில் விதையைக் கலந்து, கோணிப் பையில் போட்டு, விதையின் தோல் மிருது வாகும் வரை நீர் தெளித்து வர வேண்டும். பிறகு, விதைகளை எடுத்து விதைக்கலாம். நீரைக் கொதிக்கவைத்து இறக்கி, அதில் விதைகளை 24 மணி நேரம் ஊறவைத்தும் விதைக்கலாம்.

     இதன் குச்சிகளைப் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இதனால்தான் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என சொல்லி வைத்தார்கள். இதன் நெற்று, புரதச்சத்து அதிகம் கொண்டிருப்பதால், ஆடுகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுகின்றன.

     ஆடு மாடுகளுக்குச் சத்துள்ள தழை மற்றும் நெற்று (முற்றிய காய்); தேனீக்களுக்குப் பூக்கள் மூலமாக மகரந்தம்; அரக்குப் பூச்சி வளர்ப்புக்கு ஏற்ற தழைக்கொப்புகள்; தோல் பதனிட பட்டை; ஆரஞ்சு மிட்டாய்கள் தயாரிக்க மற்றும் பசை தயாரிக்க எனப் பல்வேறு பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது, கருவேலம்.

     தவிர, இம்மரக்கூழிலிருந்து பேப்பர், ரேயான் தயாரிக்கிறார்கள். கட்டட சாமான்கள், வேளாண் கருவிகள் செய்யவும் இம்மரம் ஏற்றது. இதன் இலைகளுக்கு நிலத்தின் களர் தன்மையை நீக்கும் தன்மையுண்டு

கருத்துகள்