குமிழ்


     

     குமிழ்மரத்தின் தாயகம் இந்தியாவாகும். இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மேலும், ஸ்ரீலங்கா, பர்மா, வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஈரச் செழிப்புள்ள பள்ளதாக்குகளில் வேகமாக நன்கு வளருகிறது.

     குமிழ் மரத்தின் தாவரவியல் பெயர் மெலைனா ஆர்போரியா (Gmelina arborea). குமிழ் மரத்தின் இலை தழைகள் கால்நடைகளுக்கு தீவனமாகவும். தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தயாரிக்கவும், ஒட்டுப்பலகை செய்ய ஏற்ற மரமாகும். பிளைவுட், பென்சில், கிரிக்கெட் மட்டை, ஜன்னல், கதவு நிலைகள், கைவினைப் பொருட்கள், மரச்சாமன்கள் என பலவாறாக பயன்படுகிறது குமிழ்.

     மரத்துண்டுகள் பழுப்பு மஞ்சள் நிறமுடையதாலும் நெருங்கி ரேகை கொண்டதாலும், மிருதுவானதாலும் எளிதில் அறுக்கக்கூடிய தன்மையுடையதாலும் பலவிதமான கைவினைப் பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் செய்ய உகந்த மரமாகும் .

     நான்கு மாதம் வரை வளர்ந்த மரக்கன்றுகளை தாய் மண் சேதமின்றி பாலிதீன் பையிலிருந்து அகற்றி நடவு செய்யலாம். இம்மரம் ஈரச் சூழ்நிலையில் நன்கு வளரும்.

     குமிழ் சாகுபடிக்கு அழமான மண் கண்டமுள்ள, தண்ணீர் தேங்காத நிலம் தேவை. களிமண், அதிக சுண்ணாம்புச் சத்துள்ள மண் பாங்கான நிலங்கள் தவிர, எல்லா வகை மண்ணிலும் இது நன்றாக வளரும்.

     நவம்பர் முதல் ஜனவரி வரையுள்ள மழைக் காலங்களில் நடவு செய்வது மிகுந்த பலன் தருவதாக இருக்கும். ஒன்றரை அடி நீள, அகலம் மற்றும் ஆழம் கொண்ட குழி எடுக்கவேண்டும். மேல் மண்ணோடு அரைக் கூடை எருவையும் கலந்து குழிக்குள் போட்டு அதில் குமிழ்ச் செடியை நடவு செய்யலாம்.

     15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் மரங்கள் குறைந்தது மூன்ற வருடங்களுக்கு நன்கு வளரும். இம்மரத்தின் கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்து விடுவதன் மூலம் மரம் ஒரே சீராக வளரும். முதலாண்டிலேயே சுமார் 10 அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது.

     இதன் இலைகள் எளிதில் மக்கக்கூடியது என்பதால், தாராளமாக ஊடுபயிர் செய்யலாம். தோட்டம் முழுக்க குமிழ்ச் செடியை மட்டுமே நடவு செய்திருந்தால், ஓராண்டு வரை கத்திரி, வெண்டை, கடலை என ஊடுபயிர் விவசாயம் செய்யலாம்.

     களைகளைப் பற்றி கவலைப்படத் தேவையிருக்காது. தேக்கு போல அதிகமா தண்ணீர் எடுத்துக் கொள்ளாது. அதேசமயம், கொஞ்சம்போல தண்ணீரை அவசியம் உறுதிப்படுத்த வேண்டும்.

     தாராளமாக தண்ணீர் கிடைக்கும் பகுதியென்றால் வாரம் ஒரு தடவை பாய்ச்சலாம். ஆண்டுக்கு ஒரு தடவை அரைக் கூடை எரு, அரை கிலோ ஜிப்சம் இரண்டையும் கலந்து கொடுத்தால், வேர் நன்றாக வளர்ச்சி அடையும். மரத்தின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

     நடவு செய்த 8 முதல் 10-ம் ஆண்டுக்குள் அறுவடை செய்யலாம். 10 ஆண்டுகளில் ஒரு மரம் ஒரு டன் எடையில் இருக்கும். அறுவடை செய்த இடங்களில், மறுபடியும் துளிர்க்கும்.

     அதை முறையாகப் பராமரித்தால் அடுத்த 6 அல்லது 7-ம் ஆண்டு மறுதாம்பை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைத்ததில், 50 சதவிகித அளவு வரையில் இந்தத்தடவை மகசூல் கிடைக்கும்

கருத்துகள்