குடைக்கருவேல்




     கடற்கரையோரங்களிலும் கடல் சார்ந்த மணல் பரப்புகளிலும் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பவை ‘உடைசாளி’, ‘ஒடை’, ‘குடை மரம்’ எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் ‘குடைக்கருவேல்’ மரங்கள். ‘அகேசியா பிளானிஃப்ரோன்ஸ்’ (Acacia Planifrons) என்ற தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது குடைக்கருவேல். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் பண்டைய இந்தியர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்ததற்கு இந்த மரங்களே சான்றாகத் திகழ்கின்றன.

     கடல் மார்க்க வணிகம் மூலமாக இம்மரங்களின் விதைகள் ஆப்பிரிக்கா, அரேபியா நாடுகளுக்குச் சென்று அங்கும் செழித்து வளர்ந்து வருகின்றன. கடற்கரையோரப் பகுதிகளில் பனை மற்றும் குடைக்கருவேல் மரங்களை அதிகளவில் வளர்த்தனர் நம் முன்னோர். இதோடு ஆடுகளையும் வளர்த்து வந்தனர். ஏனென்றால் குடைக்கருவேல் மரங்களின் நெற்றுகளும் இலைகளும் ஆடுகளுக்கு உணவாகப் பயன்பட்டது. வீடுகளில் குடைக்கருவேல் மரக்கிளைகள் விறகாகப் பயன்படுத்தப்பட்டன. பனை ஓலைகள் கூரையாகப் வேயப்பட்டன.

     இது சிறிய மர வகையைச் சேர்ந்தது. 6 மீட்டர் முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. வறட்சியான, ஈரத்தன்மை குறைந்த மணல் பகுதிகளில் குடைக்கருவேல் மரம் நன்கு வளரும். இம்மரத்தில் முள்கள் நிறைந்திருக்கும். சில மரங்களில் முள்கள் நீண்டு வெண்மை நிறத்தில் இருக்கும். சிலவற்றில் நீளம் குறைவாகக் கறுமை நிறத்தில் முள்கள் இருக்கும். இதைக் கிராமங்களில் ‘காக்கா முள்’ என்றும் சொல்வார்கள்.

     இந்த முள் விஷத்தன்மை வாய்ந்தது. அதிகக் காற்று, மழை, வெயில் என அனைத்தையும் தாக்குப்பிடித்து நிற்கும். ஆடு மாடுகள் ஒதுங்க நிழல் கொடுப்பவையாகவும் இம்மரங்கள் உள்ளன. அதனால்தான் இதற்குக் குடைக்கருவேல் என்ற பெயர் வந்தது. ஆங்கிலத்தில் ‘அம்பர்லா தான்’ என அழைக்கப்படுகிறது.

     இம்மரத்தில் ஜனவரி மாதத்துக்குமேல் பூக்கள் பூக்கும். ‘கிரீம்’ நிறத்தில் உள்ள இம்மரத்தின் பூக்கள், ஒரு சென்டிமீட்டர் அளவில் உருண்டையாகக் குட்டிக் குட்டி பந்துகள்போல காட்சியளிக்கும்.

     ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பூக்களிலிருந்து ஏராளமான நெற்றுகள் உருவாகும். கருவேல் மரத்தின் நெற்றுகளைப் போலவே இதன் நெற்றுகளும் புரதச்சத்து நிறைந்தவை. இம்மரத்தின் நெற்றுகளை ஆடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம். இதனால், ஆடுகள் கொழுத்து வளர்ந்து தோல் மினுமினுப்பாக மாறும். இதை உண்ணும் ஆடுகளின் இறைச்சி அதிகச் சுவையுடன் இருக்கும்.

     இதன் நுனி இலைகளையும் வெள்ளாடுகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. அதனால் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் ஆடு வளர்ப்பவர்களுக்கு இம்மரங்கள் நல்ல பயனளிக்கின்றன.

     இம்மரம் விறகாகவும் பயன்படுகிறது. இதன் விறகு நீண்ட நேரம் எரியக்கூடியது. குறிப்பாகக் கடற்கரை கிராமங்களில் பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் இம்மரம் விறகாகப் பயன்படுகிறது.

     மேலும், காகிதத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்திலிருந்து தயாரிக்கப்படும் ‘ஹை ஆல்பா செல்லுலோஸ்’ என்ற திரவம் விஸ்கோஸ் ரேயான், நைட்ரோ செல்லுலோஸ், டயர் தயாரிப்புக்கான நூல்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

     செம்மண், கரிசல் மண் நிலங்களிலும் இம்மரம் செழித்து வளரும். செடி உயிர்பிடித்துக்கொண்டால் அதன் பிறகு எளிதில் மடியாது. நெற்றுகளைச் சாப்பிடும் ஆடுகளிலிருந்து வெளியேறும் கழிவிலுள்ள விதைகள் அதிக முளைப்புத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. இப்படிப்பட்ட விதைகளை விதைக்கும்போது மரம் செழித்து வளரும்.

     ஒரு கிலோ எடையில் 30 ஆயிரம் விதைகள் இருக்கும். ஒரு கிலோ விதையில் எட்டாயிரம் நாற்றுகள் வரை தரமாகக் கிடைக்கும். இம்மரங்களைப் பத்து அடி இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

     நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் குடைக்கருவேல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பசுமையாக இருக்கும் இம்மரத்தின் நிழல் விழும் இடங்களில் நிலத்தடி நீர் ஆவியாவதில்லை. அதனால், கடுமையான கோடைக்காலங்களிலும் இம்மரத்தின் நிழலில் அமர்ந்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

     இம்மரங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மெல்லிய நீரோட்டம் இருக்கும். இந்த மரங்கள் தற்போது பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டன. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குச் சென்றதற்கு இம்மரங்களின் அழிவும் ஒரு காரணம். எனவே, வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் குடைக்கருவேல் மரங்களை வளர்த்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

கருத்துகள்