சந்தன வேங்கை




வேங்கையின் தாவர குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம் டெரோகார்பஸ் ஸன்டாலினஸ் (Pterocarpus Santalinus) என்ற தாவரவியல் பெயர் கொண்டது. இந்த மரத்தின் நடுப்பகுதி இரத்தம் போல தோன்றுவதாலும், சந்தனத்தின் குண நலன்கள் கொண்டிருப்பதாலும், செஞ்சந்தன மரம் அல்லது சந்தன வேங்கை என்று அழைகின்றனர்.

சந்தனத்துக்குரிய குணம், மணம் எல்லாம் சந்தன வேங்கைக்கும் உண்டு. இது சந்தன மரத்தை விடக் கடினமானது. சந்தனத்தைப் போல் வேகமாக வளராது; வேங்கையைப்போல் அடிமரமும் வேகமாகப் பெருக்காது;

மருத்துவ குண நலன்கள்:
==========================
சித்த மருத்துவத்தில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது, சரும வியாதிகள், மூலம், சர்க்கரை பாதிப்பு, கைகால் மூட்டு வீக்கம், விஷக்கடிகள் மற்றும் பாக்டீரியா, புற்றுவியாதிகள் இவற்றைப் போக்குவதில், அரு மருந்தாகப் பயன்படுகின்றன.

நிற மாற்று சிகிச்சைகளில், சந்தன வேங்கை எனும் செஞ்சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைகளில் உள்ள, டீரோஸ்டில்பீன்கள், சிடோஸ்டேரோல், மீத்தைல் அங்கோலெனேட் போன்ற வேதிப்பொருட்களே அதிக பலன்கள் தருகின்றன. அழகு சாதன தயாரிப்பிலும், சிறந்த பலன்கள் தருகின்றன.

இதன் பட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் நாள்பட்ட சீதபேதியைக் குணப்படுத்தும். அதனால்தான் அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான மரப்பாச்சி பொம்மைகளை இந்தக் கட்டைகளைக் கொண்டு செய்தார்கள். இந்த பொம்மையை, குழந்தைகள் வாயில் வைத்தாலும், உடலுக்கு கோளாறு எதுவும் ஏற்பாடாது.

அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும்:
=================================
செஞ்சந்தன மரங்கள், அணுக்கதிர் வீச்சைத் தடுக்கும் சக்திமிக்கவை! அணு உலைகள், அணு ஆயுதங்கள் இவற்றின் கதிர் வீச்சு நேரிடுகையில், அவற்றை தடுக்கும் ஆற்றல் உள்ள உலகின் ஒரே மரமாக செஞ்சந்தன மரங்கள் உள்ளது

இதன் கட்டைகள் காயக்காய கடினத்தன்மை கூடுவதால் அணுக்கதிர் வீச்சை உள் வாங்கினாலும் மரம் பழுதுபடாது.

பயன்கள் :
==========
மரக்கட்டை மிகவும் வலுவானது, கனமானது, அடர்த்தியானது, உறுதியானது, நிலைத்துச் செயல்படக் கூடியது. கரையான், பூச்சிகளின் தாக்குதல்களை எதிர்க்கக்கூடியது. கரையான் அரிக்காது. ஒலி அலையைத் தடுக்கும் திறன் கொண்டது. வெப்பத்தைக் கடத்தாது.

ஒரு வகை அலையலையான வடிவங்களைக் காட்டும் (wavy grain) ரகம், நல்ல ரகம் என்று அழைக்கப்பட்டது. இது பெருமளவு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கு ஷாமிசென் என்ற இசைக்கருவியைத் தயாரிக்கப் பயன்பட்டது. இந்த வகை தற்போது கிடைப்பது அரிது.

மற்றொரு ரகக் கட்டையில் அலை உருவங்கள் காணப்படுவதில்லை. இது சுமார் ரகம் எனப்பட்டது. சந்தையில் அதிகமாகக் காணப்பட்ட இந்த ரகம் விக்ரகங்கள், பொம்மைகள், அலங்கார வீட்டுப் பொருட்கள், வேளாண் கருவிகள், கம்பங்கள், கட்டை வண்டி, கட்டுமானப் பொருட்கள், கருவிகளின் கைப்பிடிகள், படச் சட்டகங்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்பட்டது.

சந்தனவேங்கை மரங்கள், வெப்பத்தைப்போக்கி, குளிர்ச்சியை உண்டாக்குபவை, இதனால், இந்த மரங்களை வளைகுடா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், வீடுகளில் நாற்காலி, கட்டிலாக செய்து உபயோகப்படுத்துகின்றனர், இதன்மூலம், உடல் வெப்பம் நீங்கி, உடல் நலமாக வாய்ப்புகள் கிடைக்கிறது.

பரவல்:
=======
தமிழகத்தின் எல்லையாக பண்டைக்காலத்தில் விளங்கிய வேங்கட மலை என்னும் பெயர், அங்கு அபரிமிதமாக வளர்ந்த நறுமணம் தரும் வேங்கை மரங்களால் உண்டான காரணப்பெயராகும்.

இந்த மரம் தென்னாட்டில் மட்டுமே அதிகம். கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரின் காடுகளில், ஆந்திரத்தின் திருப்பதி மலை, இராயல சீமா பகுதிகளில் சொற்ப அளவிலேயே இந்த மரங்கள் காணப்படுகின்றன.

சித்தூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கர்நூல், கடப்பா பிராந்தியங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஒரு காலத்தில் மிகுந்து விளங்கிய முதிர்ந்த மரங்கள் எல்லாம் வெட்டிக் கடத்தப்பட்டுவிட்டன.

மலைக்காடுகளில் வளரும் இயல்புடைய வேங்கை மரங்கள், நான்கைந்து ஆண்டுகளில் முப்பது அடி உயரம் வளரக்கூடியவை, ஆயினும் இவற்றின் மரம் நன்கு பருத்து முதிர்ச்சியடைய, இருபத்தைந்து ஆண்டுகள் வரை ஆகிவிடும். வறண்ட புதர்க்காடுகளில் இது சிறப்பாக வளர்கிறது.

நடவு :
======
சரளை மற்றும் செம்மண் கலந்த மண் வகைகளில் இம்மரம் சிறப்பாக வளரும். படுகை நிலத்தில்கூட நன்றாக வளரும். ஆனால், நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டியது அவசியம்.

இம்மரங்களை தனியாகவும், பழத்தோட்டங்களில் காற்றுத் தடுப்புக்காகவும் ,வரப்புகளிலும் நடவு செய்யலாம். பல இடங்களில் எலுமிச்சைத் தோட்டங்களில் செஞ்சந்தன மரங்களை காற்றுத் தடுப்பு அரணாகப் பயன்படுத்துகிறார்கள்.

10 அடி இடைவெளியில் குழி எடுத்து, இயற்கை உரங்களைப் போட்டு நடவு செய்ய வேண்டும். மெதுவாகத்தான் இந்த செடிகள் வளரும். 

மானாவாரி, இறவை என இரண்டு முறைகளிலும் இதைப் பயிரிடலாம். இறவையில் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து பாசனம் செய்து கொள்ளலாம்.

அவ்வப்போது செடிகளுக்கு சூரியஒளி நன்கு கிடைக்குமாறு கவாத்து செய்து வர வேண்டும்.

மழைக்காலத்துக்கு முன்பாக செடிகளைச் சுற்றிலும் மண்ணைக் கொத்திவிட வேண்டும். 

தற்போது சந்தன மரத்தைப் போலவே, அரசு நிறுவனங்கள்தான் செம்மரக் கட்டைகளை விற்கின்றன, பெரும்பாலும் ஏலங்கள் மூலம்

கருத்துகள்