சுண்டைக்காய்



சுண்டைக்காய்ச் செடி.... வீட்டுக் கொல்லைப்புறத்துலயும், காட்டு, மேட்டுலயும் இயற்கையாவே வளர்ந்து நிக்குது. இந்தச் செடிக்கு யாரும் உரமோ, தண்ணியோ கூட கொடுக்கிறதில்ல. ஆனாலும், கொத்து, கொத்தாக காய்ச்சுக் குலுங்கும்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனை பச்சையாகப் பறித்து தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிடலாம்.

சுண்டைக்காய் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுகசப்புச் சுவை உடையது. இதை வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.

மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும். வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மும்முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமிகள், மூலக் கிருமிகள் போன்றவை அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் அதிகமாகச் சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்திகொண்டது’’ னு சித்த மருத்துவம் சுண்டைக்காயின் மருத்துவ குணத்தைப் பெருமையா பேசுது.

மலையில விளையுற, காட்டுச்சுண்டைக்கும், சமவெளியில விளையுற நாட்டுச்சுண்டைக்கும் மருத்துவ ரீதியா கொஞ்சம் வித்தியாசம் உண்டு. இதனால, காட்டுச் சுண்டையைத்தான் பெரும்பாலும் மருந்துக்குப் பயன்படுத்துவாங்க

கருத்துகள்