நாரத்தை



Citrus Medica என்ற தாவரவியல் பெயர் கொண்ட நாரத்தை எலுமிச்சை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும். 

தமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. 

பிஞ்சு, காய், பழம் முதலியன மருத்துவக் குணங்கொண்டவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை. நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. 

திருப்பேரெயில் (ஓகைப்பேரையூர்) என்ற திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது நரத்தை மரமாகும். 

காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்திற்கு நல்ல மணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். 

நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருக்கும. கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. 

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். 

நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். 

நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம். 

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும். 

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். 

நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது. 

உப்பு நாரத்தங்காய் ஊறுகாய்
=================================
தேவையானவை: நாரத்தங்காய் - 2, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: நாரத்தங்காயை நறுக்கி வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். பிறகு, நாரத்தங்காயை எடுத்து வெயிலில் காயவைக்கவும். மாலையில் இதை எடுத்து பெரிய பாத்திரத்தில் போடவும், காலையில் நாரத்தங்காயை திரும்ப வெயிலில் காயவிடவும். இப்படியே ஒரு வாரம் வரை காயவிட்டால், உப்பு நாரத்தங்காய் ஊறுகாய் ரெடி. இது ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும். நாரத்தங்காயை சுருள் சுருளாக நறுக்கியும் இதேபோல் ஊறுகாய் செய்யலாம். 

நாரத்தை பச்சடி
=================
தேவையானவை: நாரத்தங்காய் - 5, வெல்லம் - 250 கிராம், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: நாரத்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், நாரத்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கி, நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு, வெல்லத்தை சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும். 

நாரத்தை இலை ரசம்
======================
தேவையானவை: நாரத்தை இலை - 6, கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 2, பூண்டு - 4 பல், கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - சிறிதளவு. 

செய்முறை: நாரத்தை இலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து லேசாக வதக்கி, 3 கப் நீர் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

கருத்துகள்