நெல்லி மரம்



தாவரவியல் பெயர் : பில்லாந்தஸ் எம்பிலிகா அஃபீசினாலிஸ் (Phyllanthus emblica L/)
தாவரக் குடும்பம் : யுபோர்பியேசி (Euphorbiaceae) 

தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானது தான் நெல்லிமரம் என்று கூறப்படுகிறது. இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாம். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என இருவகைகள் உண்டு. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது. 

தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வட நாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும். பல மருத்துவக் குணங்கள் இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப்புகழ்கிறார்கள். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள்.
தண்ணீர் இனிப்பாக மாறிவிடும் 

வேறு எந்த ஒரு கனியிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் ‘சி’ உடையது நெல்லிக்கனி. இந்தியா முழுவதும், பாலைப் பகுதியைத் தவிர இதர இடங்களில் இலையுதிர் காடுகளில் காணப்படுகிறது. இதன் அருமையான கனிகளுக்காகத் தோட்டங்களிலும் வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.
நெல்லி மரம் 8-12 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடிமரம் 45 செ.மீ அளவிற்குப் பருத்து சிறிது உயரத்தில் கிளைகளைப் பரப்பிக் கொண்டு, ஓரளவிற்கு அடர்ந்து காணப்படும். பட்டை கருமைச் சாம்பல் நிறத்தில் சொரசொரப்பாக இருக்கும்
நெல்லி மரம்
புதுத்தளிர்கள் உருவாகத் துவங்கியதும் அதன் சந்துகளிலிருந்து பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும். தமிழகத்தில் நெல்லிமரம் இரு முறை பூக்கின்றன. பிப்ரவரியில் ஒரு முறையும் ஜூலையில் மற்றொரு தடவையும் பூக்கும். ஆனால் பிப்ரவரியில் அதிக அளவு காய்கள் உருவாவதில்லை. ஜூலையில் பூக்கும் சமயமே நிறைய காய்கள் கிடைக்கின்றன. 

பயன்கள் : 

தழை, கால்நடைகளுக்குத் தீவனமாகும். தழையை எருவாகவும் பயன்படுத்துகின்றனர். தழையில் 25% டானின் உள்ளது. தழையிலிருந்து சாயப்பொருட்கள் எடுக்கலாம். முன்னர் டஸ்ஸார் பட்டிற்குச் சாயமேற்ற இதனை உபயோகித்துள்ளனர். 

மரப்பட்டையில் 8-9% அளவில் டானின் உள்ளது. சிறு கிளைக்குப் பட்டையில் 21% அளவில் டானின் உள்ளது. இதைப் பயன்படுத்தி தோலைத் திறம்பட பதனிடலாம். மற்றும் தோலிற்குச் சிவப்பு கருமை நிறமும் ஏற்படும். 

கனியில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. நெல்லிக்கனியிலுள்ள வைட்டமின் ‘சி’ சத்து 100 கிராம் சதையில் 720 மில்லி கிராம் வரை சில கனிகளில் இருக்கும். கடலில் பயணம் செய்வோரும் நெல்லிக்கனிப் பொடியை உணவுடன் கலந்து உண்டால் கடல் நோய் (sea - sictness) வராது. நெல்லிக்கனியில் நிறைய பெக்டினும் உள்ளது. நெல்லிக்கனியுடன் கடுக்காயையும் சேர்த்து தோல் பதனிட உபயோகிக்கின்றனர். 

நெல்லிக்காயிலிருந்து எழுதும் மையும் சாயப்பொருளும் தயாரிக்கலாம். காயிலிருந்து எடுக்கப்படும் ஒருவித எண்ணெய் தலை முடியை வளர்க்கும் எனக் கருதப்படுகிறது. 

இதற்கு நறுமணமும், பூசன மற்றும் பாக்டீரியா நாசினியாகச் செயல்படும் திறனும் உள்ளன. 

நெல்லி விதையில் புரதத்தையும் கொழுப்பையும் சிதைக்கும் என்ஸைம்கள் உள்ளன. 

மரத்துண்டுகளையும், கிளைகளையும் கலங்கிய நீரில் போட்டு வைத்திருந்தால் அதாவது கிணறுகளில் நீர் தெளிந்துவிடும். மற்றும் உப்பு நீரில் உப்பின் கடுமையைக் குறைத்துவிடும்
நெல்லி
மருத்துவப் பயன்கள் : 

மரத்தைத் தவிர, இதரப் பகுதிகள் அனைத்தும் மருத்துவப் பயன்களுடையவை. 

இலைக்கொழுந்து சீதக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். 

நெல்லிப்பூ குளிர்ச்சியுண்டாக்கி மலமிளக்கி ஆகிய பண்புகள் கொண்டது. நெல்லிவேர் வாந்தி, சுவையின்மை ஆகியவற்றைக் குணப்படுத்தும். நெல்லிக்கனி குளிர்ச்சியுண்டாக்கி, சிறுநீர் பெருக்கி, மளமிலக்கி, உரமாக்கி ஆகிய பண்புகளும் வைட்டமின் ‘சி’யும் கொண்டுள்ளது. 

நெல்லி விதை ஆஸ்துமா, பித்தம், சளி ஆகியவை குணப்படுத்தும் திறன் விதைக்கு உள்ளது.
பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய் செய்யவும், சிறியதை ஆயுர்வேத மருந்துகள், லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால், அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்றுநோய்கள் அண்டாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. 

நன்மைகள் 

உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய்சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல் பழப்பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வியாதி குணமாகிவிடும். நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும்.கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான்பயன்படுத்துகிறார்கள்.முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும். 

) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

கருத்துகள்