நோனி



தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சணத்தி வகையைச் சார்ந்தது ‘வெண் நுணா’ என்னும் ‘நோனி (Morinda citrifolia)’ மரம். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவ மாமேதை த.வி. சாம்பசிவம் பிள்ளை, தனது மருத்துவப் பேரகராதியில் நோனியைப் பற்றிப் பெரு நுணா, வெள்ளை நுணா, சேயல் நுணா, வெண்ணுணா என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். நோனி என்கிற சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாகிய நுணா என்பதுதான் வேர்ச்சொல். தமிழகமெங்கும் தரிசுக் காடுகளிலும் பரவி வளரும் நுணாவும், நோனியும் வேறு வேறு வகை. ஆனால், இவையிரண்டும் ‘மொரின்டா’ எனப்படும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தவை. நுணா, நோனி ஆகியவற்றின் இலை, பூங்கொத்து, காய், கனி ஆகியவை அனைத்தும் ஒரே அமைப்பில் இருக்கும். ஆனால், நோனி அளவில் பெரிதாக இருக்கும்.

நியூகினியா, ஃப்யூஜி முதலான பாலினேசியன் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட நோனி, ஹவாய் தீவுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனிப் பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில் வரவேற்பு அதிகம்.

நோனி, நமது பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் கூறப்படாத ஒரு தாவரம். 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இது இந்தியாவுக்குள் வந்தது.

கடற்கரையிலும் எரிமலைக் குழம்பு மணலிலும் தன்னிச்சையாக வளர்ந்து பூத்துக் காய்த்துக் குலுங்கிறது. மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் அனைத்து மருத்துவச் சிகிச்சைகளுக்கும் நோனி பயன்படுகிறது. இதனுடைய இலை, வேர், பட்டை ஆகியவையும் மருந்தாகப் பயன்பட்டாலும் பழமும், விதையும்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

இது 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரம் என்றாலும் இதை வளர்ப்பவர்கள், 10 அடிக்கு மேல் வளர விடுவதில்லை. நடவு செய்த ஒரே ஆண்டில் பூத்துக் காய்த்துப் பலன் தரும் மரமான நோனியின் பழச்சதை மற்றும் விதைப் பொடியில் நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட மருந்துப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைத் தனித்தனியாகப் பிரித்து உண்டால் பயனில்லை. அப்படியே முழுப் பழச்சாறாக அருந்தினால்தான் நன்மை கிடைக்கிறது. இதைத்தான் ‘மருந்துக் கூட்டுச் சக்தி’ (ஆங்கிலத்தில் ‘சினர்ஜி’) என்று சொல்வார்கள்.

எந்த நோயாக இருந்தாலும், அந்த நோய்க்குரிய சிகிச்சையுடன் சேர்த்து நோனி பழச்சாற்றை எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகிறது. நோனிப் பழச்சாற்றைக் குடிக்கும்போது, அப்படியே விழுங்கிவிடாமல் சிறிதுநேரம் வாயில் அடக்கி வைத்திருந்து, பிறகு விழுங்குவதால் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில், நோனிப்பழச் சாற்றுடன் உமிழ்நீர் சேரும்போது உடலில் உள்ள சத்துக் குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன.

நோயற்ற நிலையில் காலை, மாலை 1 தேக்கரண்டி (5 மில்லி) தனிப் பழச்சாற்றுடன் தண்ணீர் அல்லது வெந்நீர் சேர்த்துக் குடிக்கலாம். மன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, நரம்பு மற்றும் வாத வலிகள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் முதலான அனைத்து நாட்பட்ட நோய்களுக்கும் மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி நோனிப்பழச்சாறு எடுத்துக்கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.

சிறுநீர்ப்பைத் தொற்று, எலும்பு முறிவு, மூக்கடைப்பு, தீவிரக் காய்ச்சல், பல்வலி, இருமல், புற்றுநோய், ஆழமான காயங்கள் உள்ளிட்ட திடீர் மற்றும் தீவிர நோய் நிலைகளில் உள்ளவர்கள், தினமும் 6 முதல் 8 தேக்கரண்டி பழச்சாற்றினை இரண்டு, மூன்று வேளைகளாகப் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உயிருக்கு ஆபத்து நேரிடும் நோயுற்ற நிலை மற்றும் விபத்தினால் உண்டாகும் அதி தீவிர நிலைகளில், தகுந்த மருத்துவச் சிகிச்சைகளோடு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 15 மில்லி நோனிப்பழச்சாறு உட்கொண்டு வந்தால் மன அமைதி உண்டாகி வலிகள் குறையும். அழிவு நிலையில் உள்ள செல்கள் விரைவில் புத்துயிர் பெறும். நோனிப் பழச்சாறு உடனடியாகப் புத்துணர்வு கொடுக்கும்.

பாலூட்டும் தாய்மார்கள், இதை அருந்தினால் குழந்தைக்கு வரும் நோய்கள் குணமாகும். உடல் பலவீனமானவர்கள், நோனிப் பழச்சாற்றை நீரில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். நோனிப் பழச்சாற்றைப் பூண்டுடன் எடுத்துக்கொண்டால், கொழுப்புச்சத்து குறையும். நோனிப் பழச்சாற்றுடன் வைட்டமின் டி சேர்ந்த கலவை நீரிழிவு, எலும்பு தேய்மானம், நரம்பு வலிகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.

நோனிப் பழச்சாறு, புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் போக்குவதோடு, அப்பழக்கத்தைக் கைவிடுபவர்களின் பிரச்னைகளையும் சரிசெய்யும்.

8 வயதுக்கு மேலானவர்களுக்குத்தான், நோனிப் பழச்சாறு கொடுக்க வேண்டும். ஆனால், சில நோய் நிலைகளில் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கால் தேக்கரண்டி; மூன்று வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவில் கொடுக்கலாம்.

ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோனிப் பழச்சாறு வழங்கும்போது, மலம் மிகவும் இளகியே வெளியேறும். சாதாரண நிலையில் பெரியவர்கள் நோனிச்சாறு குடிக்கும்போது மலம் இளகி வெளியேறுவது குடல் தூய்மையாவதன் அறிகுறியாகும். தொடர்ந்து மலம் இளகி வெளியேறினால், உட்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும். 



"நோனி பழுக்க வைத்தல்" 

பொதுவாக ஒன்றரை வயது முதலே, நோனி காய்க்கத் தொடங்கும். நோனி மரத்தில் பழுக்காது. எனவே, நாம்தான் பழுக்க வைத்துப் பயன்படுத்த வேண்டும். 

நோனிக் காய்கள் முதலில் மஞ்சள் நிறமாக இருக்கும். பிறகு, வெண்மை நிறத்துக்கு மாறும். காயைத் தொட்டுப்பார்த்தால் கெட்டியாக இருக்கும். இதுவே அறுவடை செய்ய ஏற்ற நேரம். அறுவடை செய்த நோனியை தண்ணீரில் அலசி, நிழலில் காய வைக்கவும். 

அடுத்து, பாத்திரக் கடைகளில் அப்பளக் கூடை என்று விற்பார்கள். அதில் கூட நோனியைப் போட்டு, பழுக்க வைக்கலாம். இறுக்கமாக மூடும் வசதி கொண்ட பாத்திரம் இருந்தாலும்கூடப் போதும். 10 நாட்களில் நோனி பழுத்து, சாறு இறங்கிவிடும். 

இதை வடிக்கட்டி வைத்து, அதிகபட்சம் ஓர் ஆண்டு வரைகூடப் பயன்படுத்தலாம். காலை வெறும் வயிற்றில் 15 மில்லி நோனிச் சாறுடன் 100 மில்லி தண்ணீர் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாக அருந்த வேண்டும். இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன்பு, இதே அளவு குடிக்கலாம். ஆக, நாள் ஒன்றுக்கு 30 மில்லி குடித்தால் போதும். 

ஒரு சிலருக்கு நோனிச் சாறு ஆரம்பத்தில் ஒத்துக் கொள்ளாது. அதாவது, நோனிச் சாற்றைக் குடித்தால், வயிற்றுப் போக்கு, உடம்பு நமச்சல் எடுக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், நோனிச் சாற்றைக் குடிப்பதை ஒரு வார காலத்துக்கு நிறுத்தவும். பின்பு, மீண்டும் குடித்துப்பார்க்கலாம்.

கருத்துகள்

  1. நோனியின் மருத்துவ குணம் மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக