பூவரசு மரம்




மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.

காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை

அனைத்து வகை தோல் நோய்களுக்கும் அருமருந்தாகும்
பூவரசு இலையில் `பீப்பீ' செய்து ஊதி விளையாடிய அந்தப்பொழுதுகள் இன்றைக்கும் நினைவில் நிழலாடுகிறது , அந்த பூவரச மரம் கூட நம்மால் பார்க்க முடிவதில்லை.
அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன. இன்றைக்குக் கிணற்றில் நீரும் இல்லை, அவற்றிலிருந்து நீர் இறைக்கும் கமலைகள் மட்டுமல்ல மாடுகளும் இல்லை, அவை இளைப்பாறுவதற்காக நடப்பட்ட மரங்களும் இல்லை.

அதுமட்டுமல்ல சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் மார்கழி மாதத்தின் காலைப்பொழுதுகளில் நம் வீட்டுப்பெண்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகக்கருதப்படும் கோலமிடுதல் முக்கியமானது. வீடுகளின் முற்றங்களில் விழுந்து கிடக்கும் இலைதழைகள் மற்றும் குப்பைகளை அகற்றி மாட்டுத்தொழுவத்துக்குப் பின்புறம் இருக்கும் உரக்குழியில் போடுவார்கள். பிறகு மாட்டுத்தொழுவத்தில் இருந்து சாணம் எடுத்து வந்து நீர் விட்டுக் கரைத்துத் தெளித்து மாக்கோலம் இட்டு அதன் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து அதில் பூவரசம் பூவை செருகி வைப்பார்கள். இது மரபின் மருத்துவம் என்றால் அது மிகையாகாது.

பூவரசம் மரத்தின் தாவரவியல் பெயர் தெஸ்பீசியா பாபுல்னியா (Thespesia poulnea (L) என்பதாகும். இதை கல்லால் பூப்பருத்தி என்றும், புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களிலும் பூவரசு மரம் பற்றி குறிப்பிட்டிருக்கிறது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் பூவரசு மரங்கள் நிறைந்த காடு இடம்பெற்றிருக்கிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.
பல்வேறு காரணிகளால் வளியெங்கும் விரவிக்கிடக்கும் கரியமில வாயுவை உறிஞ்சிக்கொண்டு, பிராணவாயுவை வெளிவிடும் பூவரசு, அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய முக்கியமான மரம் என்கிறார்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இந்த மரம் கடுமையான புயலிலும் சாயாத தன்மைகொண்டது...அப்படியே சாய்ந்தாலும் சாய்ந்த நிலையிலேயே வளரும் தன்மை கொண்டது. பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் செய்வதற்கு அந்த காலத்தில் பூவரசு மரத்தின் பலகையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார்கள். இரும்பு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பூவரச மரத்தை சீண்டுவாரில்லை. ஆனாலும் இன்றைக்கும் பூவரசின் மகத்துவம் அறிந்தவர்கள் இதனை தேடித் தேடி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் காமாலை குணமடையும்

கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும். இது மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.

மேக நோய்க்கு மருந்து

உடல் கிருமிகளை அழிக்க வல்ல சக்தி கொண்டது பூவரசு என்று அகத்தியர் கூறியுள்ளார். இதன் காயை இடித்து சாறு எடுத்தால் பசபசப்புடன் பால் இருக்கும். இது மேக நோய்களை போக்க சிறந்த மருந்தாகும். இது சித்தர்கள் கண்ட அனுபவ மருந்தாகும்.

சொறி, சிறங்கு குணமாகும்

நூறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும்.

பூவரசம் வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி 50 மி.லி.யுடன் 10 மி.லி. ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க பேதியாகும். பேதி நிற்க மோர் குடிக்கவும். இதனால் சொறி, சிறங்கு, படை நோய்கள் குணமாகும்.

தேக்கு, கோங்கு போன்ற மரங்கள் வரிசையில் சிறந்த மரம் இந்த பூவரசு மரம். இம் மரம் வீட்டு ஜன்னல்கள், கதவுகள் செய்வதற்கும், மரச்சாமான்கள் செய்வதற்கும் ஏற்றவை. இம் மரங்களை வீட்டு உபயோகத்துக்காகவும், ஏனைய பயன்பாட்டுக்காகவும் வெட்டியவர்கள், அதை வளர்க்க முன்வரவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த இந்த மரம் தற்போது காண்பதற்கு அரிதாக மாறிவிட்டது. தற்போது கிராமப்புறங்களில் இந்த பூவரச மரம் காண்பதே அரிதாகிவிட்டது

மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்; மீண்டும் `பீப்பீ' ஊதப் புறப்படுவோம்.

கருத்துகள்

கருத்துரையிடுக