இந்தியாவின் பழமை வாய்ந்த வனவியல் அருங்காட்சியகம் -- கோவை ‘காஸ் மியூசியம்’

இந்தியாவின் பழமை வாய்ந்த வனவியல் அருங்காட்சியகம் -- கோவை ‘காஸ் மியூசியம்’

வாங்க மறுபடியும் அருங்காட்சியகத்திற்கு ஒரு விசிட் அடிப்போம்.....

கோவை, கெளலி பிரெளன் சாலையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கிறது காஸ் மியூசியம். இந்திய வன அருங்காட்சியங்களுள் மிகப் பழைமையானது. காஸ் என்னும் தனி மனிதரின் முயற்சியில் உருவான இந்த அருங்காட்சியகம், இந்திய வனங்களின் மொத்த உருவம். இங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒரு வரலாறைச் சுமந்து நிற்கிறது.

மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொறியியல் வேலைப்பாடு எவ்வாறு இருந்தது, பாலத்தை எப்படிக் கட்டினார்கள், அதற்கு என்னென்ன கயறுகளை பயன்படுத்தினார்கள், மரத்தை எப்படி வளர்த்தார்கள் என்பன குறித்தும் அருங்காட்சியகத்தில் வடிவமைப்பு மாதிரிகளுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வனவியல் கூறுகளை அறிந்து கொள்ளும் விதமாக அருங்காட்சியகம் உள்ளது.

அமைந்த கதை :

19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சென்னை மாகாணத்தின் வனப் பாதுகாப்பு அதிகாரி ஜே. ஏ. காம்பிள் மாகாணத்தில் ஒரு வன அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க முயன்றார். ஆனால் அம்முயற்சி வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகள் கழித்து காம்பிளுக்குப் பின் வனப் பாதுகாப்பாளராகப் பணியாற்றிய ஹொரேஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் மீண்டும் முயன்று அதில் வெற்றி கண்டார். ஏப்ரல் 15, 1902 அன்று சென்னை மாகாண ஆளுனர் ஆம்ட்ஹில் பிரபுவால் இவ்வருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது.

காஸ் அதன் முதல் காப்பாளராகப் பணியாற்றினார். அவர் ஓய்வு பெற்ற பின்னால் அப்பணியை ஏற்ற எஃப். ஏ. லாட்ஜ், அருங்காட்சியகத்துக்கு காசின் பெயரைச் சூட்டினார். 1905 மற்றும் 1912 இல் அருங்காட்சியகம் இருமுறை விரிவு படுத்தப்பட்டது. வனத்துறையாளர்களுக்கு பயிற்சியளிக்க 1912 இல் சென்னை வனக் கல்லூரி (தற்போது தமிழ்நாடு வன அகாதமி) அருங்காட்சியக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. 1942-47 காலகட்டத்தில் அருங்காட்சியகம் மூடப்பட்டு, இரண்டாம் உலகப் போர் காரணமாக மால்டா மற்றும் கிரீசிலிருந்து புலம் பெயர்ந்த அகதிகளைக் குடியமர்த்த முகாமாக பயன்படுத்தப்பட்டது.

1947 இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் அருங்காட்சியகம் சென்னை மாநிலம் (தமிழ்நாடு) அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது இந்திய வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகத்தால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. இக்கழகம் அருங்காட்சியக வளாகத்திலேயே அமைந்துள்ளது.

என்ன இருக்கிறது மியூசியத்தில்?

அருங்காட்சியகத்தின் நடுவே, பிரமாண்டமாக வீற்றிருக்கிறது இந்தியன் பைசன். இது மைசூரை ஆண்ட ஜெயச்சந்திர உடையாரால் 1956-ல் வழங்கப்பட்டது. இங்கே இடம்பெற்றிருக்கும் புலியின் நான்கு வார கருவும், "யானை டாக்டர்", வி.கிருஷ்ணமூர்த்தியால் அளிக்கப்பட்ட யானையின் கருவும், பார்ப்பவரை அவ்வளவு எளிதில் நகர விடுவதில்லை. இதுதவிர ஒரு பெரிய யானையின் எலும்புக் கூடு, பாடம் செய்யப்பட்ட சிறுத்தை, லங்கூர், கேஷ்ல் மான் போன்றவற்றின் பாகங்களும் இருக்கின்றன. இவையனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் இந்திய வனங்களில் சுற்றித்திரிந்தவை.

வனத்தின் விலை சொல்லும் வரலாறு

"காற்று நடுநடுங்க வெள்ளையரின் இரும்புக் கோடாரிகள் பேரொலியைக் கிளப்பிய போதுதான் காடுகளின் மரண ஓலம் உறுதிப்படுத்தப்பட்டது. அந்த ஓலத்தை ஒவ்வொரு மரமும் கேட்டது. வான் முட்ட எழுந்த புகைத்தூண்கள் காலனின் வருகைக்கு பாலம் அமைத்தன" என்று தங்கள் காடுகள் அழிக்கப்பட்டதை பதிவு செய்தார் கலிபோர்னிய எழுத்தாளர் ஜான் முயர். இதே வன்முறைகள்தான் இந்திய வனங்களிலும் பிரயோகிக்கப்பட்டது. ஆட்சி செய்ய வந்த வெள்ளையர்களால் அதிகளவிலான மரங்கள் வணிக நோக்கத்துக்காக வெட்டப்பட்டன. தேவை என்ற பெயரில் தேவைக்கதிகமாக சூறையாடப்பட்டன.

தென்னிந்திய மர வகைகளில் தேக்கு, ஆங்கிலேயரின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. 1900-ம் ஆண்டு மட்டும் 63,598 டன்  தேக்கு மரம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. தேக்கின் வரலாறே பிரமிப்பாக இருக்கும்பொழுது, இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருக்கும் 456 வருட பழைமையான தேக்குமரம் வியப்பின் உச்சம். அம்மரத்தின் குறுக்கு வெட்டு துண்டின் சுற்றளவு 5.7 மீட்டர். வாஸ்கோடகாமா இந்தியாவில் தரையிறங்கியபோது இந்த மரத்தின் வயது 50. கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட போது இதன் வயது 260. இப்படி பல நூற்றாண்டுகளைக் கடந்து, இங்கே நிற்கிறது இந்த டெக்டோனா கிராண்டீஸ் (தேக்கு மரம்). கிராண்டீஸ் என்ற சொல்லின் பொருள் 'பிரமாதம்'

வனத்தின் குழந்தைகள்:

வனமும், மக்களும் எந்தளவுக்கு உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இங்கே இருக்கும் ஒரு புகைப்படம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி இனம் பாட்சாவ். இவ்வின ஆண்கள் மீன் வேட்டைக்குச் சென்றுவிட, பெண்கள் கிழங்கு அகழச் செல்வார்களாம். அந்த சமயங்களில் 'தாய் மரம்' என்று அவர்கள் நம்பிய பெரிய மரத்தின் அடியில், தங்கள் குழந்தைகளைக் கிடத்தி, கால்களை இலை சருகாலும், மண்ணாலும் மூடுவார்கள். இதனால் குழந்தையால் அசைய முடியாது. ஆனால், தாய் திரும்பி வரும்வரை குழந்தைகள் அழவோ, பயப்படவோ செய்யாதாம். தாங்கள் இல்லாத நேரங்களில், குழந்தைகளை 'தாய் மரம்' பார்த்துக்கொள்வதாக நம்பினர் பாட்சாவ் இன மக்கள்.

இப்படி பல அதிசயங்களை உள்ளடக்கிய  காஸ் அருங்காட்சியகத்தில் மிக உயரமான சந்தன மரம், மிகப்பெரிய விதை, கிங் கோப்ரா முட்டைகள், விமான கட்டுமானத்தில் பயன்படும் எடை குறைவான பால்சா மரத்துண்டு, இந்தியப் பூச்சி இனங்கள் எனப் பல  வியப்பூட்டும் காட்சிப் பொருள்களும் இருக்கின்றன.

காஸ் அருங்காட்சியகம், இரண்டாம் உலகப்போரின்போது, கீரீஸ் (Greece) மற்றும் மால்டா (Malta)வில் இருந்து வந்த போர் அகதிகள் தங்கும் இடமாக  மாற்றப்பட்டது. அகதிகளாக வந்தவர்களின் மனநிலை, பொருள்களை ரசிக்க இடம் கொடுக்கவில்லை பல அரிய பொருள்களை குளிர் காய்வதற்காக எரித்துவிட்டார்கள். பல பொருள்கள் ஏலத்தில் விற்கப்பட்டது. ஜே.ஏ.மாஸ்டர்  என்னும் பிரிட்டிஷ் வன அதிகாரியின் பெரும் முயற்சியால் காப்பாற்றப்பட்டவைதான் தற்போது இங்கே எஞ்சியிருப்பவை.

காஸ் நினைத்திருந்தால் தான் சேகரித்த பொருள்களை கப்பலில் ஏற்றி தாயகம் கொண்டு போயிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அடிமைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில் அம்மக்களுக்கான வரலாற்றைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என அவர் நினைத்தார். அந்த எண்ணம்தான் இந்த அருங்காட்சியகத்தின் அஸ்திவாரம்.

வனவியல் குறித்த நிறைய விஷயங்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் :

இந்த வனவியல் அருங்காட்சியகத்துக்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டால், அவர்களுக்கு வனவியல் குறித்த நிறைய விஷயங்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. .

பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள், மரங்கள், தாவர வகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் பொறியியல் வேலைப்பாடு எவ்வாறு இருந்தது, பாலத்தை எப்படிக் கட்டினார்கள், அதற்கு என்னென்ன கயிறுகளை பயன்படுத்தினார்கள், மரத்தை எப்படி வளர்த்தார்கள் என்பன குறித்தும் அருங்காட்சியகத்தில் வடிவமைப்பு மாதிரிகளுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், பொருளாதார மற்றும் நிர்வாகக் காரணங்களால் அருங்காட்சியகம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டது. இதனிடையே, வன ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. தற்போது, அருங்காட்சியகம் ஞாயிறு மற்றும் மத்திய அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வருகிறது.

வனம், அதில் வசிக்கும் உயிரினங்கள், தாவரங்கள் உள்ளிட்ட நிறைய விஷயங்களைக் கற்றுத் தரும் இந்த வனவியல் அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஒரு நபருக்கு ரூ. 5 பார்வைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், உள்ளூர் மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருப்பதால் அதிகம்பேர் வந்து செல்வது இல்லை. இதைத்தவிர சில தனியார் பள்ளிக் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர்.

"இந்த அருங்காட்சியகம் குறித்த தகவலை மக்களிடம் கொண்டு செல்லும்பட்சத்தில், அதிக அளவிலான மக்கள் வந்து பார்வையிடும் வாய்ப்பாக அமையும். வனவியல் குறித்து அறிந்து கொள்ளவும் முடியும். இந்தியாவில் இதுபோன்ற வனவியலுக்கு என்ற அருங்காட்சியகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், உள்ளூர் குழந்தைகள் அறியாத அளவுக்கு, விளம்பரம் இல்லாமல் செயல்பட்டு வருவது வேதனை தரும் விஷயம். கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் அழைத்து வரப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக அமையும். அருங்காட்சியகமும் கவனத்தைப் பெறும்" என்கின்றனர் வனவியல் ஆர்வலர்கள்.

கருத்துகள்