அணிநிழற்காடு

#வள்ளுவம்_போற்றும்_அறம்
#அணிநிழற்காடு
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்

          கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடிகளுக்கு மேலேயுள்ள மலைகள் மழையை அறுவடை செய்கிறது. அப்படி அறுவடை செய்யப்படுகின்ற நீரை காடு தன் தேவைக்குப்போக மீதியை கொஞ்சங் கொஞ்சமாக வெளியேற்றுகிறது. அப்படி வெளியேறுகிற நீரானது ஒன்றுதிரண்டு தெளிந்த நீரோடையாகிறது.தொடர் மழையால் நீரோடையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க பாறைக்கும், நீரோடையின் உரசலுக்கும் மண் பிறக்கிறது.இந்த தொடர் ஒட்டம் நிலைக்க வேண்டுமானால் அணி நிழற்காடு நிலைத்திருப்பது மிகமிக அவசியம்.

#மலை, மலைத் தரும் மழை, மழைத் தரும் ஆறு, ஆறு தரும் சோறு, அதன்மூலம் மக்களின் வாழ்வு என்று உணர்ந்துகொண்ட நமது முன்னோர்கள் திணைகளில் முதன்மைத் திணையாக குறிஞ்சியை வெகுவாகப் போற்றியிருக்கிறார்கள்.

#ஏழு_குணங்களையுடைய
#தாவரங்கள்

1. பெருமரங்கள்,
2. குறுமரங்கள்,
3. புதர்கள்,
4. செடிகள்,
5. தரைக்கொடிகள்,
6. மேல்கொடிகள்,
7. கிழங்கினங்கள்.
இந்த ஏழுவகையான தாவரங்களைக் கொண்ட காடுகள் எப்போதும் வனப்பு குறையாமல் இருக்கும். இவற்றின் சமநிலைச்சீர் குலையும்போது மரங்கள் ஒன்றோடொன்று உரசி தீப்பிடித்து எரித்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்
-திருக்குறள்

#அணிநிழற்காடு :
அணி என்றால் ஏழு என்று ஒரு அர்த்தம் உண்டு.ஏழு வகையான குணங்களைக் கொண்ட காடு என்பது அணிநிழற்காடு என்கிறது வள்ளுவம். இந்த அணிநிழற் காட்டை பாதுகாப்பதே ஒவ்வொரு அரசின் கடமையென்கிறது. அந்த மரபின் தடம் அழிந்து போகாமலிருக்கவே #கபடி என்கிற விளையாட்டை கட்டமைத்திருக்கிறார்கள் தமிழர்கள். ஏழுநபர்கள் கொண்டது ஓர் அணி. ஓர் அணியில் வரிசை கட்டி நிற்கும் இருபுறமும் எப்போதும் தடுப்பாட்டமும், தற்காப்பாட்டமும் ஆடுவார்கள். பாடிச்செல்பவர் ஏழுபேர்கள் கொண்ட அணியை உடைக்க முற்படுவார்...அந்த ஏழுபேரும், பாடி வருபவரை முடக்க முற்படுவார்கள். உடைப்பது, ஒட்டுவது, உறுதியாவது, ஒற்றுமையாக இருப்பது போன்றவை அணிநிழற் காட்டை ஒவ்வொரு நாடும் பாதுகாக்க எடுத்துக்கொள்கிற மரபின் நீட்சியே.

இயல்பாக ஒரு அணிநிழற் காடு உருவாக ஐநூறிலிருந்து, ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகுமென்கிறது ஓர் ஆய்வு. சமவெளியில் ஒரு கனி தரும் மரம் நிற்கிறது. அந்தக் கனியை பறவை உணவாக உட்கொண்டு பறந்துச் செல்கிறது. பறக்கும் பொழுது, தான் உண்டு செரித்த பழத்தின் எச்சத்தை மலைகளில் தூவிச் செல்கிறது. அங்கே எச்சத்திற்குள் ஒளிந்திருக்கும் விதை முளைவிட்டு வளர்கிறது. வளர்ந்து மரமாக ஆனபின் தன்வாழ்நாள் முழுமைக்கும் தனது இலைகள், பூ, காய், கனி என எல்லையில்லாத வளங்களை அந்தக் காடுகளுக்குள் வாழும் உயிரினங்களுக்கு உணவளித்துக்கொண்டே இருக்கின்றன. பின் ஒரு நாள் தன் வயோதிகத்தில் தன் வாழ்நாளை முடித்துக்கொண்டே மடிந்து வீழ்கிறது. அது மட்கி, மண்ணோடு மண்ணாக மாறி காடுகளுக்குள் பொழியும் மழையில் அடித்துச்செல்லப்பட்டு ஆற்றின் போக்கில் பயணித்து மீண்டும் சமவெளிக்கு ஆற்றல் உருமாற்றம் பெற்று வந்துசேர்கிறது.
இப்படியொரு தொடர்நிகழ்வு நிகழ 1000 ஆண்டுகள் ஆகலாம். இவற்றில் மனிதனின் பங்கென்பது எள்ளவும் இல்லை இயற்கையில் ஆயிரம்
ஆண்டுகாலம் எடுத்துக்கொள்ளும் 

(ஒரு அணிநிழற்காட்டை மனிதர்கள் தன் அறிவுக்கூர்மையால் பத்தே ஆண்டுகளில் பக்குவமாய் வளர்தெடுக்க முடியும்.)
            
ஆனால் மனிதர்கள் தன் அறிவால் ஆற்று மணலை அள்ளுவது, காடுகளை அழிப்பது, மலைகளை குடைவது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். மனிதர்கள் தமது பங்குக்கு சமவெளிகளில் அணிநிழற் காடுகளை உருவாக்கலாம்.

1. பெருமரங்கள்,
•••••••••••••••••
அரசு, ஆல், நாவல், செஞ்சந்தனம், வேங்கை, புளி, மாவலிங்கை, வில்வம், வேம்பு, மா, பலா, கடுக்காய், அசோகமரம், பனை, தென்னை, சந்தனமரம், வெப்பாலை, ருத்திராட்சம், தில்லை, பலாசு, தான்றி, கொடுக்காபுளி, கடம்பு, தேக்கு, குமிழ், மருதம், விளா, வன்னி, சப்போட்டா, புன்னை, வெள்வேல், அகில், மூங்கில், நாகலிங்கம், கருங்காலி, எட்டி, இயல்வாகை, கோங்கு, இலுப்பை, பாதாம், உசிலை, கறிபலா, அழிஞ்சில், ஏழிலைப்பாலை, சிசு, இலவம், பதிமுகம், சிறுநாகப்பூ, அயனி, செண்பகம்,

2. குறுமரங்கள்:
••••••••••••••••
கொய்யா, எழுமிச்சை, கமலா, அகத்தி, வாழை, முருங்கை, பப்பாளி, புங்கன், மருதோன்றி, கருவேப்பிலை, மகோகனி, தோதகத்தி, ஆமணக்கு, அத்தி, தேனத்தி, பேயத்தி, சரக்கொன்றை, அந்திமந்தாரை, நெல்லி, நொச்சி, மாதுளை, சீத்தா, கல்யாணமுருங்கை,
3. புதர்கள்:
••••••••••••
பொதுவாக இருத்தல் உயிரினங்கள் அனைத்தும் தனக்கேயுறித்தான இடங்களை கைப்பற்றி வளர்ந்தாலும்கூட ஒருசில உயிரினங்கள் தனக்கான இடத்தில் பிறவற்றிக்கும் இடம்கொடுத்து வளரச்செய்யும் ஆற்றல் பெற்றவை. இவையே நாளடைவில் புதர்களாக உருமாற்றம்பெற்று ஊர்வனவற்றின் புகழிடமாகின்றன.
பூனைப்பழக்கொடி, வேலிப்பருத்தி, கோவைக்கொடி, இலந்தை, மஞ்சணத்தி, காரமுள், கிளிசிரிடியா, நெய்வேலிகாட்டாமணக்கு போன்றவை உடனே புதர்மண்டும் குணங்களைக்கொண்டவை.

4. செடிகள்:
••••••••••••
அரளிச்செடி, ஆவாரை, ஊமத்தை, எருக்கு, எள்ளு, கத்தரி, கள்ளி, கற்றாலை, கனகாம்பரம், குப்பைமேனி, காசித்தும்பை, தவசி முருங்கை, கொத்தவரை, கோழிக்கொண்டை, தக்காளி, மிளகாய், சுண்டைச்செடி, செடிப்பசலை, சூரியகாந்தி, துளசி,நந்தியாவட்டை, மல்லி, கேழ்வரகு, கம்பு.
5.தரைக்கொடிகள்:
•••••••••••••••••••
தர்பூசணி, மஞ்சள் பூசணி, வெள்ளைப்பூசனி, சுரை, முசுமுசுக்கை, மிதிபாகல், வெள்ளரி, மிதுக்கங்கொடி, மினிக்காகொடி.

6. மேல்க்கொடிகள்:
•••••••••••••••••••
பாகல், பீர்க்கன், புடலை, பிரண்டை, திராட்சை, சங்குப்பூக்கொடி, வெற்றிலை, மிளகு.
7. கிழங்குகள்:
••••••••••••••••
உருளை, சக்கரைவல்லிக் கிழங்கு, கருணைக் கிழங்கு சேப்பங்கிழங்கு, கோழிக்கிழங்கு, மரவல்லிக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள், பூண்டு, வெங்காயம், சிறுகிழங்கு.

மேலே குறிப்பிடப்பட்டவை ஒரு எடுத்துக்காட்டுதான்..இவற்றில் ஏதாவதொன்று கூடக்குறைய இருக்கலாம்.. தவறில்லை. வழக்கமாக நடவு செய்யும் மரப்பயிர்களின் இடைவெளியை விட சற்றுக்குறைவாக நடவு செய்து ஒருங்கிணைப்பதின்மூலம் சமவெளியில் ஒவ்வொரு தோட்டத்தையும் அணிநிழற் காடுகளாக மாற்றமுடியும்.

#அணிநிழற்காடு_உருவாக்கத்தின் #போது_மேற்கொள்ளவேண்டிய_நீர் #மேலாண்மை:

முதலில் மழைப் பொழிவின் போது பாய்ந்து செல்லும்நீரை தடுத்து, சம உயர வரப்புகளை உருவாக்க வேண்டும். பின் நம்மிடம் இருக்கும் நீரின் அளவைப் பொருத்து குழாய்கள் பதித்து நீர் பாய்ச்ச வேண்டும்.
நடவுசெய்த முதல்மாதம் தினசரியும், அடுத்த இரண்டு மாதம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும், அடுத்த நாலாவது மாதத்திலிருந்து பன்னிரெண்டாவது மாதம்வரை வாரத்திற்கு ஒரு முறையும், இரண்டாம் வருடத்தில் முதல்பாதி ஆறுமாதம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையும், அடுத்த பின்பாதி ஆறுமாதம் மாதத்திற்கு ஒருமுறையும், மூன்றாம் வருடம் முழுவதும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், நான்காம் வருடம் ஆறுமாதற்திற்கொருமுறை வீதம் இரண்டு தண்ணீரும் கொடுத்து பின் ஐந்தாம் வருடம் முதல் தண்ணீர் கொடுப்பதை சுத்தமாக நிறுத்திவிடவேண்டும்.
அதன் பின்பு அந்தக்காடு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இரண்டாம் வருடம் முதலே ஆடு, மாடு, கோழி, புறா, தேன் போன்றவற்றை ஒருங்கிணைப்பதின் மூலம் மேலும் உபரி வருமானத்தைப் பெறமுடியும்.
மரப்பயிர்களில் கூடுதல் கவனம் செலுத்துவதின் மூலம் வருடம் முழுவதும் வருமானம் தரும் காடாக அது மாறும்.
மலைகளைக் குடைகிற காரியத்தில் காட்டுகிற அக்கறையை இதுபோன்ற குறுங்காடுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினால் சமவெளிகளில் கடந்துபோகிற மழைமேகங்களை எளிதாக அறுவடைசெய்யலாம்.இயற்கையில் ஆயிரம் ஆண்டுகாலம் எடுத்துக்கொள்ளும் ஒரு அணிநிழற்காட்டை மனிதர்கள் தன் அறிவுக்கூர்மையால் பத்தே ஆண்டுகளில் பக்குவமாய் வளர்தெடுக்க முடியும்.

உலகில் வாழும் ஒவ்வொரு இனக் குழுக்களினுடைய வாழ்க்கையின் வளமையென்பது, அவர்கள் பேசும் மொழி தாங்கி நிற்கும் வளமையே ஆகும். தொல்காப்பியம் , சங்க இலக்கியம் தொட்டு, சமகால இலக்கியம் வரை தமிழ்மொழி விரிவடைந்து கொண்டே, தன்னையும் புதுப்பித்து கடந்து போகிறது. பதினொன் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் ஒரேயொரு குறளில் மட்டும் இவ்வளவு செழுமை புதைந்துகிடக்கிறதென்றால், மொத்தமும் படித்து முன்னேற, நடைமுறைப்படுத்த இந்த ஒரு ஆயுள் போதாதுதான். வருங்கால தமிழ்ச் சமூகத்தின் மீது எவ்வளவு தூரம் காதல் கொண்டிருந்தால் இவ்வளவு ஆகச்சிறந்த அறம் பாடியிருப்பான்.அந்தக்குறளை படிக்கும்போதே கீழே பார்த்தால் நிலம் தெரியாத, மேலே பார்த்தால் வானம் தெரியாத....பாம்புகளும், பறவைகளும் ஒருசேர நடமாடும் நந்தவனத்தில் நம் மனம் எப்போதும் லயித்தே கிடக்கக் துடிக்கும்.
பருவத்தில் மழைவேண்டி விரும்பி நிற்கும் இந்த தக்காணபீடபூமியில், மழையை மாரியாக பாவித்து வணங்கும் இந்த மண்ணின் குழந்தைகள் தாய்மொழியைவிட்டு வெளியேறி ரெய்ன்...ரெய்ன்... கோ அவே பாடிக்கொண்டிருப்பது   தமிழ்ச்சமூகத்தின் துரதிஷ்டமே!

கருத்துகள்