வெள்வேலம்

            வெள்வேல மரங்கள் கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் வெள்வேலம் செழித்து வளர்ந்திருக்கும்.  கொங்கு மண்டலத்தில், மானாவாரி நிலங்களில் உயிர்வேலி அமைக்கப்பட்டு, அதற்குள் இம்மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கும். அதற்குள் மேயும் கால்நடைகளுக்கு இதன் நெற்றுகள் சிறந்த நொறுக்குத்தீனியாக இருந்து வருகின்றன. இதன் விதைகள் பறவைகள், ஆடு மாடுகள் மூலமாகப் பரவுகின்றன. இது பத்து மீட்டர் உயரமுடைய மரம். இதன் சிறப்பே, அதன் ஆரம்பகால வளர்ச்சிதான். விதை முளைத்த பிறகு உருவாகும் கிளைகள் மிகவும் மெல்லியவை. அவை கிடைமட்டத்தில் நான்கு பக்கமும் படர்ந்து கொண்டு, நடுவில் உள்ள குருத்து பகுதியைப் பாதுகாக்கும். இதன் மூலமாக நடுக்குருத்துப் பாதிக்கப் படாமல் மரம் வேகமாக வளரும். வறண்ட பூமியிலும் வளர்ந்து, ஆடுகளுக்குத் தழையும், மாடுகளுக்கு நெற்றும் தந்துதவும் அற்புதமான மரம் வெள்வேலம். இதன் பட்டை, 'சாராயம்' காய்ச்ச மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இந்த மரத்தை வளர்க்க நினைப்பவர்கள், விதைகளை நேரடியாக விதைப்பது சிறந்தது. ஒரு கிலோவில் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விதைகள் இருக்கும். இதன் முளைப்புத்திறனும் அதிகம்.

கருத்துகள்