விளாம்பழம்


     விளாம்பழம் அற்புதமான பழம். அஜீரண கோளாறைக் குணப்படுத்தும். உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகமா இருக்கு. அதனால, எலும்பு, பல்லுக்கு பலம் கொடுக்கும். இது, இளநரையைப் போக்கும், உடலுக்கு வலிமை தரும்இ,ப்படி இதோட பலன்களை பட்டியல் போடலாம். ஆனா, இதையெல்லாம் நாம முழுமையா பயன்படுத்திக்கறதில்லை. விளா மரத்துல முள் இருக்கறதால அதை அருமையான உயிர்வேலியாவும் பயன்படுத்தலாம். தோட்டத்தை சுத்தி நட்டு வெச்சா, கோட்டைத்தூண் மாதிரி பாதுகாப்பா இருக்கும். இதை, உயிர்வேலியா பயன்படுத்துறப்போ வருமானமும் கிடைக்கும். குஜராத் மாநில விவசாயிங்க... விளா மரத்தை உயிர் வேலியா பயன்படுத்தறாங்க. அந்த மாநிலத்துல நிறைய கடைகள்ல விளாம்பழத்துல வெல்லம் போட்டு, ஐஸ்கிரீம் மாதிரி விக்கிறாங்க.








   இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவிளா மரமானது எங்கும் வளரக்கூடியது என்றாலும் காடுகளில் அதிகம் காணப்படுகிறது. வீடுகள், தோட்டங்கள் மற்றும் கோயில்களிலும் வளர்க்கப்படும் இந்த மரம் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. 30 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்த மரத்தின் இலைகள் கூட்டிலைகளாக காணப்படும். நல்ல மணம் வீசக்கூடியது; காய்கள் பார்ப்பதற்கு வில்வக்காயைப் போன்று உருண்டையாகக் காணப்படும். பழத்தின் ஓடு அதிக கெட்டியாகவும், உள்சதை மரத்தின் நிறத்திலும், விதைகள் வெள்ளையாகவும் காணப்படும்.


    கடிபகை, கபித்தம், பித்தம், கவித்தம், விளவு, தந்தசடம், வெள்ளி போன்ற பல பெயர்களைக் கொண்ட விளா மரத்தின் கொழுந்து, இலை, காய், பழங்கள், பட்டை, ஓடு, பிசின் என எல்லாமே மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும். தரையோடு ஒட்டிப் படர்ந்து வளரக்கூடிய அதை நில விளா என்றும் சிறிய மரமாக வளர்வதை சித்தி விளா என்றும், பெரிதாக வளரக்கூடிய மரங்களை பெருவிளா என்றும் கூறப்படுகிறது.


   விளாம்பழத்தின் சதை காயாக இருக்கும்போது துவர்க்கும்; பழுத்தால் துவர்ப்பும் புளிப்பும் கலந்த புதுச்சுவையுடன் இருக்கும். நறுமணம் வீசும் இந்தப் பழத்தை பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். பசியைத் தூண்டும், ரத்தம் ஊறும், வாந்தியை நிறுத்தும், மலத்தைக் கட்டும். குடலுக்கும் உடலுக்கும் பலம் தருவதோடு விந்து ஊறச் செய்யும், பித்தக் கோளாறுகளை நீக்குவதுடன் அதனால் வரக்கூடிய தலைச்சுற்றலைப் போக்கும். நரம்புகளைச் சுருங்கச் செய்வதுடன் கோழையை அகற்றும். விளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன. விளாம்பழச் சதையுடன் தேன், திப்பிலித் தூள் சேர்த்து சாப்பிட்டால் விக்கல், மேல் மூச்சு வாங்குதல் போன்றவை சரியாகும்.


   பழத்தை மட்டும் சாப்பிடுவதால் வாயில் நீர் ஊறல், வாய்ப்புண், ஈறு சம்பந்தமான நோய்கள் நீங்கி நன்றாக பசி ஏற்படும். பிரசவமான பெண்கள் விளாம்பழத்தை கூழாக்கிக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம் பெறும். முழு காயை சட்டியில் போட்டு அது நனையுமளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். வெந்ததும் கீழே இறக்கி உடைத்து அதன் உள்ளே இருக்கும் சதையை மட்டும் எடுத்து அத்துடன் அரை டம்ளர் தயிர் சேர்த்துக் காலை வேளைகளில் தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்றவை பூரணமாக குணமாகும்.


   காயை வேக வைத்து உடைத்து அதன் சதையை எடுத்து உப்பு, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துத் துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்துத் தொடர்ந்து ஏழு நாள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் சரியாகிவிடும். விளாங்காய் மற்றும் வில்வக்காயின் சதைப்பகுதியை எடுத்து அதைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்து வந்தால் மூல நோய் மற்றும் அதுதொடர்பான பிரச்னைகள் குறையும்.


   விளா மரத்தின் கொழுந்து எலுமிச்சை அளவு எடுத்து அரைத்து பால், கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பசியின்மை, கபத்துடன் கூடிய இருமல், இளைப்பு, பித்தம், கணைச்சூடு ஆகியவை விலகும். தளிர் இலையை அரைத்து 10 கிராம் எடுத்து மோருடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றோட்டம் நிற்கும். இதேபோல் இரண்டு நாள்கள் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.


   விளா இலைத் தளிர், நாரத்தை இலைத் தளிர், கறிவேப்பிலை, எலுமிச்சை இலை சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி 100 கிராம் அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் மிளகு, வெந்தயம் 10 கிராம், வறுத்துப் பொடித்த கடலைப் பருப்பு 100 கிராம், உப்பு 20 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு பொடியை தினசரி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும். அத்துடன் நன்றாக பசி எடுப்பதுடன் எதுக்களித்தல், வாயில் நீர் ஊறல், வாந்தி நிற்கும். இதனால் உடலுக்கு ஊட்டம் கிடைக்கும்.


    "விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோடு" என்பது பழமொழி . இடு மருந்தை விளாம்பழத்து ஓடு முறிக்கும் என்பது பொருள் ! விளாம்பிசினை உலர்த்தி தூளாக்கி காலை, மாலை ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு (மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு), நீர் எரிச்சல், உள் உறுப்புகளில் ரணம் போன்றவை சரியாகும். இதைச் சாப்பிடும்போது உணவில் உப்பு சேர்க்கக்கூடாது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விளா மரத்தின் பழங்கள் விரும்பி உண்ணப்பட்டாலும் இந்த மரத்தை ஆர்வமாக நட்டு வளர்க்க யாரும் முன்வராததாலேயே இது ஓர் அரிய வகை மரமாக மாறிவிட்டது.

கருத்துகள்