வாகை



    முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும். வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள் வாகை மரத்திலிருந்துதான் மரச்செக்கு செய்யப்படுகிறது; ஆடு, மாடுகளுக்குத் தீவனம்; நிலத்துக்குத் தழையுரம்; வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல்; மண்ணரிப்பைத் தடுக்கிறது; மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைப்பது நலம். வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம் என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.

   அல்பிஸியா லெபெக் (Albizia lebbeck) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் வாகை; வாகையில் காட்டு வாகை, தூங்குமூஞ்சி வாகை என இரண்டு வகைகள் உண்டு. இதில் தூங்குமூஞ்சி வாகை, நிழலுக்கு மட்டும்தான் பயன்படும். எனவே, . சாலையோரங்கள், அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் நிழல் கொடுக்க, தூங்குமூஞ்சி வாகையை நடவு செய்யலாம்.


காட்டு வாகை:
================ 
   காட்டுவாகை, இந்தியத் துணைக் கண்டம், வடகிழக்குத் தாய்லாந்து, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள தீவுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவின் சில பகுதிகள், வடக்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டது. வெப்ப வலயப் பகுதிகளில் இது பரவலாகக் காணப்படுகின்றது. 600 தொடக்கம் 2500 மிமீ வரையான மழை வீழ்ச்சி கொண்ட பகுதிகளில் இது சிறப்பாக வளரக்கூடியது.


தூங்குமூஞ்சி மரம்:
==================== 
   பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட மரமாகும். பண்ணி வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாக கூறுகிறது. இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.


நடவு:
====== 
    ஒரு கன அடி குழியெடுத்து, எரு போட்டு, 15 அடி - 20 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்யலாம். விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். சாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் நடவு செய்த 10-ம் வருடத்தில் நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும்.


மருத்துவ பயன்கள் :
===================== 
   வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால் பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.


மரச்செக்கு:
============ 
   கலப்படமற்ற, சுத்தமான இயற்கை குணங்கள் மாறாமல் எண்ணெய் கிடைக்கவே, பாரம்பர்ய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. மரச்செக்கில் இருக்கும் உரல் உலக்கையானது "வாகை" மரத்தால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மரச்செக்கில் பொருட்களை அரைக்கும்போது பிழியப்படும் எண்ணெயும் சூடேறாது, தானியங்களின் வாசனையும் மாறாமல் இருக்கும். இதற்கு காரணம் தரமான ஹியர் பகுதிதான். இந்த ஹியர் பகுதியால் மரச்செக்கு சுழலும்போது சீரான சுழற்சியால் உரல் உலக்கையின் தேய்மானம் குறைகிறது. இதனால், எண்ணெய் அதிகமாக சூடாவது தடுக்கப்படும். ஆனால் இயந்திரத்தில் எண்ணெய் எடுக்கும்போது எண்ணெயில் கை வைக்க முடியாத அளவுக்கு வெப்பமாக இருக்கும். இந்த அளவுக்கு எண்ணெய் வெப்பமானால் அதில் உள்ள உயிர் சத்துக்கள் குறைந்துவிடும் என்பதே உண்மை.


தீவனம்:
======== 
   இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது.


தழையுரம்: 
============ 
   உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

கருத்துகள்