மனிதர்களும் இயற்கையும்

 ஆசான் ம.செந்தமிழன் அவர்கள் எழுதிய அறிதல் எனும் நூலில் இருந்து....



இயல்புகளைப் புரிந்து கொள்ளாததுதான், எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம். மனிதர்கள் முதலில் தம் இயல்புகளை உணர்வதில்லை. சக மனிதர்களின், பிற உயிரினங்களின் இயல்புகளையும் புரிந்து கொள்வதில்லை. பொத்தாம் பொதுவான சில காரண  காரிய அறிதல்களை வைத்துக்கொண்டு, தம்மைத் தாமே மதிப்பிடுகின்றனர். இதே வகையில், பிறரையும் இயற்கையின் அங்கங்களையும் தர்க்கப்பூர்வமாக மட்டும் அறிந்து கொள்கின்றனர்.  பக். 12


காரண காரியத்தில் உழல்வோரால் நிம்மதியாக வாழவியலாது. ஏனெனில், அவர்கள் விளைவுகளைக் கண்டு அஞ்சுவார்கள். ஒவ்வொரு விளைவுக்குப் பின்னாலும் சில மனிதர்களின் சதி உள்ளது என நினைப்பார்கள். பக் 23


உங்கள் இயல்பு எதுவென உணர்ந்தால், உங்களுக்குப் பொருத்தமானவை எவையெனப் புரியும். 


சிக்கல்கள் வரும்போது, 'எனக்குத் தீர்வு வேண்டும்' என வேண்டுங்கள், தீர்வு உங்கள் அருகில் இருப்பதை அறிந்து கொள்வீர்கள். 


'எல்லாவற்றிற்கும் கணக்கு போட்டுத்தான் களத்தில் இறங்குவேன்' என்றால் நம்மால் களத்தில் இறங்கவே முடியாது. ஒருவேளை, அப்படி கணக்கு போட்டு களத்தில் இறங்கிய பின் பார்த்தால் கணக்கு தவறாகியிருக்கும். பக். 29


அறிதலுக்கு ஆட்படாமல் மனிதர்களோடு பழகுங்கள். அவர்களைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ளாதீர்கள். அவர்களை ஆய்வுக்குட்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களோடு எவ்வாறு பழகுகிறார்கள் என மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருத்தமாக இருந்தால் தொடருங்கள், இல்லையெனில் விலகுங்கள். விலகினாலும் அவர்களைத் தூற்றாதிருங்கள். பழகினாலும் அவர்களைப் போற்றாதிருங்கள். இது தான் அறிதலுக்கு ஆட்படாதிருத்தல். 

பக். 54


எது ஒன்று சிக்கலாக இருக்கிறதோ அது தீர்வல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று, சிக்கல் செய்கிறதென்றால் அது தீர்வு கிடையாது.            தாகம் எடுக்கிறது. தண்ணீர் குடித்தால் தாகம் அடங்கிவிடும். ஆனால், ஒரு குளிர்பானம் குடித்தால் தாகம் அடங்காது. அந்தக் குளிர்பானம் தயாரிப்பதற்கு அவ்வளவு சிக்கலான தொழில்நுட்பம் உள்ளது. தண்ணீருக்கு ஒன்றுமே தேவையில்லை. அது மிக எளிமையானது. வானத்திலிருந்து வருகிறது. அதை எடுத்துக் குடித்துக்கொள்கிறோம். இது தீர்வு, இது எளிமையாகத்தான் இருக்கும். பக். 38

கருத்துகள்